×

வைகுண்ட ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு

காரமடை, டிச.23: காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த டிச 13ம் தேதி திருமொழி திருநாள் தொடக்கம் எனப்படும் பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது. தொடர்ந்து தினமும் அரங்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று காலை 5:30 மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக அதிகாலை நான்கு மணியளவில் மூலவர் அரங்கநாத பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் ஆண்டாள் சன்னதி அருகே எழுந்தருள உள்ளார். தொடர்ந்து புண்யாவாசனம், வேதபாராயணம் உள்ளிட்டவை முடிந்து சரியாக காலை 5:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. முன்னதாக நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட மூவரும் சொர்க்கவாசல் திறந்தவுடன் பெருமாளை எதிர்கொண்டு சேவிப்பர். பின்னர், சடாரி மரியாதை மூன்று ஆழ்வார்களுக்கும் செய்யப்படும். இதனையடுத்து சொர்க்கவாசல் வீதி வழியாக நான்கு ரத வீதிகளிலும் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அரங்கநாத பெருமானுக்கு அனைத்து சமூக மண்டபப்படிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

மீண்டும் இரவு 10 மணிக்கு கோயில் மண்டபத்தில் அரங்கநாத பெருமான் எழுந்தருள்வார். அங்கு திருவாய்மொழி திருநாள் எனப்படும் இராப்பத்து உற்சவம் துவங்க உள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் அரங்கநாத பெருமான் ஒவ்வொரு அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு ராட்சத எல்இடி டிவி மூலமாக பக்தர்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. தீயணைப்பு, வருவாய், நகராட்சி, காவல்துறை, சுகாதார துறையினர் பக்தர்களின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் அதிக அளவில் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்பதால் தடுப்புகள் அமைத்து வரிசையில் சென்று அரங்கநாத பெருமானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதல் இரவு வரை கோயில் நிர்வாகம் சார்பில் சொர்க்கவாசல் அருகே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார்.

The post வைகுண்ட ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Gate of Paradise ,Vaikunda Ekadasiaioti Karamada Aranganatha Swami Temple ,Karamada ,Ekadashi Excitement ,Aranganatha Swami Temple ,Paradise ,Gate ,Vaikunda Ekadasiaioti ,Karamadi Aranganatha ,Swami Temple ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...